கோவை மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கோவை மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
UPDATED : நவ 05, 2025 10:40 PM
ADDED : நவ 05, 2025 10:30 PM

கோவை : கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவரையும் வரும், 19ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2ம் தேதி இரவு, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, துாரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, என்பது தெரியவந்தது. கடந்த 3ம் தேதி இரவு, மூவரும் துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்தபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கால்களில் குண்டு பாய்ந்த மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும் இதே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று( நவ.,11) இரவு மருத்துவமனைக்கு வந்த ஜே.எம்., 2 நீதிபதி அப்துல் ரகுமான், மாணவியை சந்தித்து உடல்நிலையை கேட்டறிந்தார். அதன் பின், மூன்று குற்றவாளிகளை சந்தித்து, ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். மூவரையும் வரும், 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

