குழந்தைகள், குடும்பத்தோடு வந்தவர்கள் அலைந்து திரிந்து அவதி
குழந்தைகள், குடும்பத்தோடு வந்தவர்கள் அலைந்து திரிந்து அவதி
ADDED : அக் 07, 2024 02:43 AM
நம் விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி, நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. இந்நிகழ்ச்சியை காண, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம் குடும்பமாக காலை, 8:00 மணி முதல் வரத் துவங்கினர்.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் நிகழ்ச்சியை காண வந்தவர்கள், ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் அந்த சாலையை ஒட்டியுள்ள, லைட் ஹவுஸ் ரயில் நிலையம் அருகிலும், வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்தபடி மெரினா சென்றனர்.
அதே போல, ஜாம்பஜார் வழியாக வந்தவர்கள் பெல்ஸ் சாலை பகுதியிலும், வாலாஜா சாலை வழியாக வந்தவர்கள் எழிலகம், சென்னை பல்கலை பின்புறம், கலைவாணர் அரங்கம் பகுதியிலும், வாகனங்களை நிறுத்தியபடி, மெரினா கடற்கரை நோக்கி நடந்து வந்தனர்.
காலையில் காமராஜர் சாலையில் தடுப்பு ஏற்படுத்திய போலீசார், ஒரு பகுதியில் மக்கள் நடந்தபடி சென்று, கண்ணகி சிலை வழியாக, மெரினா கடற்கரை செல்ல அனுமதித்தனர். சாலையின் மற்றொரு பகுதியில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் கார் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனால், நெரிசல் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று, மெரினா கடற்கரை மணலில் பல லட்சம் பேர் அமர்ந்து, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
மதியம், 1:00 மணிக்கு விமான சாகச நிகழ்ச்சி முடிந்ததும், கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் வீடு திரும்ப கிளம்பினர்.
இதனால், கடற்கரையை விட்டு வெளியே செல்லும் கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், அவ்வையார் சிலை, அயோத்தி குப்பம், பெசன்ட் சாலை, வி.பி.ராமன் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டன. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி அனைவரும் திக்குமுக்காடினர். ஏற்கனவே, மூன்று மணி நேரத்திற்கு மேல் வெயிலில் நின்றிருந்ததுடன், கூட்ட நெரிசலில் சிக்கியதால், ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், பலர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குறிப்பாக, முதியவர்கள் மயக்கம் அடைந்தனர். ஒரு அடி இடைவெளி கூட இல்லாமல், மக்கள் நெருக்கமாக சென்றதால், மூச்சுவிட முடியாமல் குழந்தைகள் கதறின. அப்படி இருந்தும், ஒருவருக்கொருவர் முந்தியடித்து, தாங்கள் நிறுத்திய இடங்களுக்கு சென்று வாகனங்களை எடுத்தனர்.
வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, மெரினா கடற்கரையை இணைக்கும் முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதனால், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூரில், மெரினா கடற்கரையை ஒட்டிய தெருக்களில் வாகனங்களை நிறுத்தியவர்கள், தங்களின் வாகனத்தை எடுத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை.
பெசன்ட் சாலை, பீட்டர் சாலை, ராயப்பேட்டை சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை என, மற்ற பகுதிகளுக்கு செல்லகூடிய முக்கிய சாலைகளை அணுகவே, இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். இதன் விளைவாக, அடையாறு பாலம், அண்ணா சாலைகளிலும் நேற்று மதியம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
விவேகானந்தர் இல்லத்தில் இருந்து ஐஸ்ஹவுஸ் அரை கி.மீ., துாரம் கூட கிடையாது. இதை ஐந்து நிமிடங்களுக்குள் நடந்து செல்லலாம். ஆனால், விமான சாகச நிகழ்சியை பார்த்து மக்கள் திரும்பிய போது, மதியம், 1:10 மணியளவில் விவேகானந்தர் சாலையில் இருந்து ஐஸ்ஹவுஸ் நோக்கி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதனால், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து ஐஸ்ஹவுஸ் செல்ல ஒரு மணி நேரமானது.
குடிநீருக்கு கதவை தட்டிய மக்கள்
மெரினா கடற்கரையை இணைக்கும் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, வி.பி.ராமன், ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சாலைகள் மற்றும் அந்த சாலைகளை ஒட்டிய தெருக்களில் இருந்த கடைகளில், காலையில் குடிநீர், குளிர்பானம் போன்றவற்றின் விற்பனை அமோகமாக இருந்தது.
பல கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த உணவு பொருட்கள், குடிநீர், குளிர்பானங்கள் விற்று தீர்ந்து விட்டன. மதியம் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய மக்கள், கூட்டத்தில் மூன்று மணி நேரம் நின்றதால் மயக்க நிலை ஏற்பட்டு திணறினர். கடைகளிலும் குடிநீர் கிடைக்கவில்லை. அவர்கள், அந்த பகுதிகளில் இருந்த வீடுகளின் கதவை தட்டி, குடிநீர் வாங்கி குடித்தனர். குழந்தைகளை பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் தின்பண்டங்களை வழங்கினர்.

