கோவையில் செம்மொழி பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோவையில் செம்மொழி பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : நவ 26, 2025 11:03 AM
ADDED : நவ 26, 2025 12:29 AM

கோவை: கோவையில், 208.50 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
முன்னதாக, ஆயுதப்படை போலீசாரின் அலங்கார அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். பின், கடையேழு வள்ளல்கள் சிலைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, படிப்பகம், திறந்தவெளி அரங்கம் போன்றவற்றை பார்வையிட்டு மரக்கன்று நட்டார். பூங்காவின் சிறப்பம்சமாக செம்மொழி வனம், மூலிகை வனம், பாறைத்தோட்டம், ஐந்திணை வனம், மகரந்த தோட்டம் என, 23 வகையான தோட்டங்கள், 38.69 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓராட்டுக்குப்பை கிராமத்தில், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் ஜி.டி.நாயுடு அறக்கட்டளை பங்களிப்புடன், 5.67 கோடி ரூபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைத்து கட்டப்பட்டுள்ளன. இந்த 86 புதிய வீடுகளுக்கான சாவிகளை, பயனாளி களுக்கு வழங்கிய முதல்வர், கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.
நாட்டுப்புற கிராமிய கலைநிகழ்ச்சியை பார்த்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், ராஜா, கயல்விழி, எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

