ஆவின் பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு ரூ.11 உயர்த்துவதா?
ஆவின் பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு ரூ.11 உயர்த்துவதா?
ADDED : அக் 18, 2024 10:10 PM
சென்னை:ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு 11 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'ஆவின் கிரீன் மேஜிக்' பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பாலை, 'ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற பெயரில், திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது.
கிரீன் மேஜிக் 1 லிட்டர், 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மி.லி., 50 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயரை மாற்றி, லிட்டருக்கு 11 ரூபாய் அதிகமாக வசூலிப்பது பகல் கொள்ளை. லிட்டர் 44 ரூபாய்க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்துவதே, ஆவினின் திட்டம் என கூறப்படுகிறது; இது வணிக அறம் அல்ல.
தனியார் நிறுவனங்கள் கையாளும் அதே மோசடியை, அரசின் ஆவின் நிறுவனமும் செய்வதை ஏற்க முடியாது. லாபம் ஈட்டுவதற்காக, அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது. எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

