கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்
ADDED : ஜன 28, 2026 07:56 AM

சென்னை: தமிழகத்தில், 14 வயது சிறுமியருக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, ஹெச்.பி.வி., தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அரியலுார், தர்மபுரி, பெரம்பலுார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள, 30,209 பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொளி காட்சி வாயிலாக, இத்திட்டத்தை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இத்திட்டத்தை செயல்படுத்த கடந்தாண்டு பட்ஜெட்டில், 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இத்திட்டத்தை வரவேற்று, பெண் டாக்டர்களும் எழுதியிருந்தனர். இதில், 3 லட்சத்து, 38,649 சிறுமியருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
முதல் கட்டமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள, 30,209 மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்த போகிறோம். அதேபோல், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, 38 நடமாடும் மருந்து வாகனங்கள், 'வெல்னஸ் ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் செயல்பாட்டில் உள்ளன.
பெண்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோய்க்கு, தரமான சிகிச்சை வழங்க, காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை, 120 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையில் மகளிர் விடியல் பயண திட்டத்தில், ஐந்து வழித்தடங்களில் பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில், 10 இளஞ்சிவப்பு பஸ்கள், 50 மகளிர் காவலர்களுக்கான வாகனங்கள், ஐந்து பிங்க் ஆட்டோ ஆகியவற்றையும் முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழக தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன
'நான் முதல்வன்' திட்டத்தில், திறன் பயிற்சி பெற்ற மாணவியருக்கு பணி நியமன ஆணைகளும், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம், அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் உள்ளிட்ட கடனுதவிகளும் வழங்கப்பட்டன
தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்க செயல் திட்ட ஆவணத்தையும், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

