விவசாயத்துக்கு தனி மின்வழித்தடம் அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு
விவசாயத்துக்கு தனி மின்வழித்தடம் அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு
ADDED : ஜூலை 17, 2025 11:21 PM
சென்னை:தமிழகத்தில் விவசாயத்துக்கு, தனி மின் வழித்தடம் அமைப்பது, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய, மறுசீரமைப்பு மின் திட்டத்தை முடிப்பதற்கான அவகாசத்தை, 2028 மார்ச் வரை, மத்திய மின்துறை நீட்டித்துள்ளது.
நாடு முழுதும் மின்சாரத்தை எடுத்து செல்லும் போது ஏற்படும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்க, மறு சீரமைப்பு மின் வினியோக திட்டத்தை, மத்திய அரசு, 2021 - 22ல் துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், தமிழக கிராமங்களில், விவசாயத்திற்கு தனி வழித்தடத்தில், மின் வினியோகம் செய்வது, அதிக திறன் வழித்தடங்களை பிரித்து அமைப்பது, உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
இத்திட்டப் பணிகளை, 9,245 கோடி ரூபாயில் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அதில், 6,300 கோடி ரூபாய், மத்திய அரசின் கடன். மீதியை மின் வாரியம் கடனாக வாங்கிக் கொள்ளலாம். திட்டப் பணிகளை, 2026 மார்ச்சுக்குள் முடித்து விட்டால், மத்திய அரசின் கடன் மானியமாகி விடும்.
இல்லையெனில் வட்டியுடன் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில், 2023 - 24ல் துவக்கப்பட்ட, மறுசீரமைப்பு மின் திட்டப்பணிகள், 50 சதவீதம் கூட முடிவடையவில்லை. மேலும், 3.04 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தவில்லை எனில், மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மறுசீரமைப்பு திட்ட பணிகளை முடிக்க, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. இதனால், மத்திய அரசின் மானியம் கிடைக்காமல், வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில், அத்திட்ட அவகாசம், 2028 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மறுசீரமைப்பு திட்டப்பணிகள், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகளை முடிக்க, மத்திய அரசு, 2028 மார்ச் வரை அவகாசத்தை நீட்டித்தாலும், 2027 மார்ச்சுக்குள் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

