ADDED : ஏப் 09, 2025 01:24 AM
சென்னை:கட்டுமான பணிக்கு கமிஷன் பெற்றதாக எழுந்த புகாரில் கைதான, புதுச்சேரி பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட மூவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
புதுச்சேரி பொதுப்பணி துறையில், கட்டடம், சாலை, குடிநீர் மற்றும் மேம்பாலம் தொடர்பான பணிகளை, 'டெண்டர்' எடுக்கும் ஒப்பந்த நிறுவனங்கள், மொத்த டெண்டர் தொகையில், 20 சதவீதத்தை துறை அதிகாரிகளுக்கு கமிஷனாக தருவதாக, சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றன.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், தனியார் கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர் மன்னார்குடி இளமுருகு ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் அவர்களை கைது செய்தனர்.
கைதான மூவரும் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

