ஆட்டோ, கார் டிரைவர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்: ஆணையர் உறுதி
ஆட்டோ, கார் டிரைவர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்: ஆணையர் உறுதி
ADDED : மார் 14, 2024 12:51 AM
சென்னை:''ஆட்டோ, கார் ஓட்டுனர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், பெருநிறுவன வாடகை வாகன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்படும்,'' என, தொழிற்சங்கங்களிடம், போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உறுதி அளித்து உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில், உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க பொதுச்செயலர் ஜாகிர் ஹுசைன் தலைமையிலான நிர்வாகிகளுடன், ஆணையர் சண்முகசுந்தரம் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஆட்டோ மீட்டர்கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதை விரைந்து உயர்த்தித் தர வேண்டும். இது தொடர்பாக அமைச்சருடன் பேச்சு நடத்த வேண்டும்.
'கார்களுக்கான வாடகைக் கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும். மினி வகை கார்களுக்கு, 5 கி.மீ.-க்கு 200 ரூபாய் என்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும்' என, தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்துவது தொடர்பான அனைத்து கோப்புகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இறுதி முடிவை அரசு வெளியிட வேண்டும்.
''அதே நேரம், மீட்டர் கட்டணம் தொடர்பாக, அமைச்சர் சென்னை திரும்பியவுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்படும். வாடகை வாகனங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலும் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
''அதுவரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், வாடகை வாகன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, ஓட்டுனர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

