கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி: டிஜிபியிடம் சவுக்கு சங்கர் திடுக்கிடும் புகார்!
கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி: டிஜிபியிடம் சவுக்கு சங்கர் திடுக்கிடும் புகார்!
ADDED : செப் 17, 2025 07:41 PM

சென்னை : ''சென்னை போலீஸ் கமிஷனர் வருண், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் ஆகியோர் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்,'' என டிஜிபியிடம் யுடியூபர் சவுக்கு சங்கர் மனு அளித்துள்ளார்.
இதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் இருவரும் கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று எனக்கு தகவல் கிடைத்தது. எனது உயிருக்கு ஆபத்து இருந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். இருப்பினும், அதிகாரிகள் கொலை செய்யும் அளவுக்கு துணிய மாட்டார்கள் என நினைத்து இருந்தேன். 2024 மே மாதம் கைதாகி கோவை சிறையில் இருந்த போது உள்ளே என் மீது கடுமையாக தாக்கப்பட்டு வலது கைகளில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
நீதித்துறை காவலில் சிறை செல்லும் போது தாக்குதல் நடப்பது என்றால், அதிகாரிகள் எந்த எல்லைக்கு செல்வார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். திருச்சியில் வருண் குமார் எஸ்பியாக இருக்கும் போது, என்னை காவலில் எடுக்க முயன்று எனது உணவில் விஷம் வைக்க முயற்சி நடந்தது. கவர்னர் அளவில் தலையிட்டாதல் அது நடக்கவில்லை.
என் மீது இரண்டு முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. எனது பேச்சை நிறுத்த வேண்டும், அதிகாரிகளின் ஊழலை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக நான் சவுக்கு மீடியா நடத்தி வந்த கட்டடத்தின் உரிமையாளர் மிரட்டப்பட்டு, அந்த கட்டடத்தில் இருந்து என்னை காலி செய்ய வைத்தனர். எனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4, 5 மாதங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12 வழக்குகள் சென்னை காவல் எல்லையில் போடப்பட்டன. இரண்டு வழக்குகள் திருச்சியில் போடப்பட்டுள்ளன.எனது வீட்டில் வயதான தாயார் இருந்தபோது சாக்கடை, மலம் ஊற்றப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுவதும் வழக்கை சந்தித்து கொண்டுள்ளேன்.
இந்நிலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையை நியமித்து இரண்டு அதிகாரிகளும் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இனியும் இதை வெளியிடாமல் இருப்பது எனது உயிருக்கு ஆபத்து என்பதால் இன்று டிஜிபி வெங்கட்ராமனை நேரில் சந்தித்து கொலை முயற்சி குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு டிஜிபியிடம்அளித்தேன்.
அதனை முழுமையாக படித்து பார்த்து பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். சிறையில் தாக்கப்பட்ட போது கூட உயிர் போகும் என நினைக்கவில்லை.மலமும் அள்ளி ஊள்ளப்பட்டபோது கூட ஆபத்து இல்லை ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன் என்னை கொலை செய்ய வேண்டும் எனபது தான் இரண்டு அதிகாரிகளின் திட்டம் என்பதால் டிஜிபியிடம் மனு அளித்துள்ளேன்.
இந்த அரசில் என்ன செய்தாலும் நாம் தப்பித்து விடலாம் என்ற துணிச்சல் இந்த அதிகாரிகளுக்கு வந்துவிட்ட காரணமாகத் தான், இவர்கள் நினைத்தவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் அடைக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். நீதிமன்றம் பல முறை அரசையும், அவர்களையும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தவறு என்று முறை கண்டித்த பிறகும் கூட இப்போது கூட ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, அவரையே குண்டர் சட்டத்தில் கைது செய்த விவகாரத்தை அருண் செய்துள்ளதை பார்த்துள்ளோம். உயிருக்கு ஆபத்து என்பதை டிஜிபி கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.