சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ADDED : ஏப் 30, 2025 07:09 AM
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. மறுதேதி குறிப்பிடாமல், சபையை ஒத்தி வைப்பதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது:
பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச், 14ல் துவங்கியது. அன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2025- - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மார்ச், 15ல் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீது ஐந்து நாட்கள் நடந்த விவாதத்தில், 31 எம்.எல்.ஏ.,க்கள், 12 மணி நேரம், 31 நிமிடங்கள் பேசினர். தி.மு.க.,வை சேர்ந்த 16 பேர், 4 மணி நேரம் 14 நிமிடங்கள்; இதர கட்சிகளை சேர்ந்த 15 பேர், 8 மணி நேரம், 17 நிமிடங்கள் பேசினர். நிதி அமைச்சர், 55 நிமிடங்கள், வேளாண் அமைச்சர், 24 நிமிடங்கள் பதில் அளித்தனர்.
துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது, 23 நாட்கள் விவாதம் நடந்தது. இதில், 163 எம்.எல்.ஏ.,க்கள், 49 மணி நேரம், 19 நிமிடங்கள் பேசினர். தி.மு.க.,வினர் 72 பேர் 18 மணி நேரம் 1 நிமிடம், இதர கட்சியினர் 91 பேர், 31 மணி நேரம் 18 நிமிடங்கள் பேசினர்.
முதல்வர் ஸ்டாலின், தன் பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாக 38 நிமிடங்கள்; இதர துறைகள் தொடர்பான விவாதங்களுக்கு, 15 நிமிடங்கள் பதில் அளித்தார். மானிய கோரிக்கை விவாதங்களுக்கு, 23 மணி நேரம், 29 நிமிடங்கள் அமைச்சர்கள் பதில் அளித்தனர். சபையில் 2,411 வெட்டுத் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
எம்.எல்.ஏ.,க்கள் 101 பேர் 25,398 கேள்விகள் அளித்தனர். அதில், 7,674 கேள்விகள் அனுமதிக்கப்பட்டன. 253 கேள்விகள், 1,033 துணை கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டன. சட்டசபை நிகழ்ச்சிகளை, 23,221 பேர் நேரில் பார்வையிட்டனர். அதில், 4,614 பேர் பெண்கள். சட்டசபை நுாலகத்திற்கு 145 எம்.எல்.ஏ.,க்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு, 501 நுால்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.

