ADDED : ஜூலை 04, 2025 06:16 AM

திருபுவனம்: கோவில் காவலாளி அஜித்குமார், 27, தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னணியில், உயர் அதிகாரிகள் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
நகை, பணம் திருடியதாக அஜித்குமார் மீது புகார் அளித்த, மதுரையை சேர்ந்த நிகிதாவின் தந்தை துணை கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரின் தாய், அரசு பணியில் இருந்துள்ளார். முனைவர் பட்டம் பெற்ற நிகிதாவும், அரசு கல்லுாரியில் பணிபுரிந்துள்ளார்.
திருமண மோசடி, அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கிலும் நிகிதா சிக்கி உள்ளார். நிகிதாவின் குடும்பத்தார் அரசு பணிகளில் இருந்ததால், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர்.
அவர்களுடன் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது, அஜித்குமார் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி உள்ளது.
சி.பி.ஐ., அதிகாரிகள், திருப்புவனம் காவல் நிலைய போலீசார் பதிவு செய்துள்ள ஆவணங்களை பெற்றுள்ளனர். அஜித்குமார் கொலைக்கு மூல காரணமாக இருந்த உயர் அதிகாரிகளிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.