ஜனவரி 6ம் தேதி முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஜனவரி 6ம் தேதி முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
UPDATED : டிச 23, 2025 08:26 AM
ADDED : டிச 22, 2025 11:28 PM

சென்னை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பலமுறை பேசியும் பலன் இல்லாததால், அறிவித்தபடி ஜனவரி 6 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
'பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் வாக் குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் பேச, கடந்த பிப்ரவரி மாதம், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை.
அடுத்தடுத்து போராட்டங்கள்
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட போவதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்தன. அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் மீண்டும் பேச்சு நடத்தினர்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு, தலைமை செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி உட்பட, அரசால்அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு போட்டி சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனால், அரங்கில் கூட்டம் அலைமோதியது. பேச்சில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என, அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
கண்டிக்கிறோம்
இது குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கங்களை, பேச்சுக்கு அழைத்த அமைச்சர்கள் குழுவினர், 'உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள்' என, கருத்து கேட்பு கூட்டமாக நடத்தினர்; இதை கண்டிக்கிறோம். 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், பேச்சுக்கு அழைத்து, மீண்டும் முதலில் இருந்து, 'கோரிக்கைகளை சொல்லுங்கள், முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறோம்' என்று கூறுவதை கண்டிக்கிறோம்.
போராடும் சங்கங்களை அழைத்து பேச்சு நடத்தாமல், ஒரு சில சங்கங்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓய்வூதிய குழு காலக்கெடு, செப்., 30ல் முடிந்தும், இன்று வரை குழுவிடம் இருந்து, ஒரு அறிக்கை கூட பெற முடியாத அரசாக, இந்த அரசு இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் 27ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, கருப்பு பட்டை அணிந்து நடத்தப்படும். அடுத்து, 2026 ஜன., 6 முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்.
பெருத்த ஏமாற்றம்
மன வருத்தத்தோடு போராட்ட களத்திற்கு செல்கிறோம். பேச்சுக்கு அழைத்ததும், ஆட்சி முடியும் நிலையில், கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் சென்றோம். எங்களுக்கும், போராடும் இயக்கங்களுக்கும், இந்த ஆலோசனை கூட்டம், பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எங்கள் தொடர் வேலை நிறுத்தம், ஜன., 6ல் துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அமிர்தகுமார் கூறியதாவது:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்தவர்களை, முழுமையாக பேச அனுமதிக்கவில்லை; அவர்களின் கோரிக்கையை முழுமையாக கேட்கவில்லை. உறுப்பினர்கள் எண்ணிக்கையில், குறைவான சங்கங்கள் மற்றும் சங்கங்களில் இருந்து நீக்கப்பட்ட அமைப்புகளை அதிகம் பேச வைத்தனர். இதிலிருந்தே, இந்த பேச்சு முறையாக நடக்கவில்லை என்பது ஊர்ஜிதமானது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என, அமைச்சர்கள் கூறினர். என்ன அறிவிப்பு, எந்த தேதி என்பதை அவர்கள் சொல்லவில்லை. எந்த உத்தரவாதமும் கொடுக்காததால், திட்டமிட்டபடி வரும், 29ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஜனவரி, 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

