'வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.475 கோடி ஒதுக்கீடு'
'வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.475 கோடி ஒதுக்கீடு'
ADDED : பிப் 08, 2024 10:04 PM

சென்னை:''வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், சேதம்அடைந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்,'' என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழக நெடுஞ்சாலை துறையில், சென்னை மற்றும் விழுப்புரம் வட்டத்தில் பணிபுரியும் 14 சாலை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதற்கான ஆணைகளை நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மேலும், 90 பேருக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
பின், அவர் கூறியதாவது:
துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், அதி கன மழை காரணமாக, 118 இடங்களில் சாலைகள் முழுமையாக சேதமடைந்தன; தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு, ஐந்து நாட்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டன. தற்காலிக பணிக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை, திருவள்ளூர், துாத்துக்குடி, திருநெல்வேலி உட்பட எட்டு மாவட்டங்களில், மழையால் சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சீர் செய்ய, 475 கோடி ரூபாய் தேவை. இத்தொகை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.
மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானம், ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் செல்வதால், அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை முடிக்க, 24 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தாலும், 18 மாதங்களில் பணிகளை முடிக்க உள்ளோம்.
சென்னையில் அண்ணா மேம்பாலத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு பூங்கா, வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்படுகின்றன. கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
அண்ணாதுரை நினைவிடமும் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடியும். அதன்பின் முதல்வருடன் கலந்தாலோசித்து, தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

