210 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்: இபிஎஸ்
210 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்: இபிஎஸ்
UPDATED : ஜூலை 15, 2025 07:09 PM
ADDED : ஜூலை 15, 2025 06:47 PM

பெரம்லூர்: ''வரும் தேர்தலில், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க., கனவு காணலாம். ஆனால், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
கனவு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் இ.பி.எஸ்., பேசியதாவது: 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க., கனவு காணலாம். ஆனால், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.
ஏழை மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தை ஏழை மக்களுக்கு அவர் கொடுக்கவில்லை. ஆனால், மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகிறார். மத்திய அமைச்சரிடம் நாங்கள் பேசும்போது, ' இந்த திட்டம் குறித்த முறையான கணக்கை தமிழக அரசு காட்டவில்லை' என்றார். நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒரு பகுதி நிதியை மத்திய அரசு விடுவித்தது. உரிய முறையில் கணக்கு கொடுத்து இருந்தால், நமது பணம் உரிய நேரத்தில் வரும். ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கட்சி தி.மு.க.,
ஊழல்
கண்ணில் பார்க்க முடியாத காற்றில் கூட தி.மு.க., ஊழல் செய்துள்ளது.இந்த ஆட்சியில் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்றும் அரசு தி.மு.க., அரசு. மக்களிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால், மக்களை குழப்பி பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக 4 கூடுதல் தலைமை செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முழு பொறுப்பு
நேற்று கூடுதல் தலைமச் செயலர் அமுதா, 1.5 கோடி பேரிடம் மனு வாங்கி 1.1 கோடி மனுவுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். தீர்வு காணப்பட்டது என்றால், எந்தெந்த மனுவுக்கு, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும். தவறாக புள்ளி விவரம் கொடுப்பவர்கள் மீது அதிமுக அரசு அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானவர்கள். உண்மையை பேச வேண்டும். தி.மு.க.,வுக்கு உடந்தையாக இருக்காதீர்கள். தி.மு.க., முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக.,வில் சேருங்கள். அரசு அதிகாரிகளாக இருந்துவிட்டுதவறான புள்ளிவிவரத்தை கொடுக்காதீர்கள். மக்களை குழப்பாதீர்கள்.நீங்கள் தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும்.
மரண அடி
நான் கள்ளத்தனமாக அமித்ஷாவை சந்தித்ததாக திமுக.,வினர் கூறுகின்றனர். அவர் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என எண்ணிய ஸ்டாலினுக்கு மத்திய அரசு மரண அடி கொடுத்துவிட்டது.
அமித்ஷா வீட்டு கதவை இ.பி.எஸ்., தட்ட வேண்டும் என்கிறார். இதில் என்ன தவறு. அவர் உள்துறை அமைச்சர். நீங்கள் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். செய்பவர்களையும் விட மறுக்கின்றீர்கள். மக்களுக்கு நீங்களாவது செய்ய வேண்டும். செய்பவர்கள் கதவை தட்டினால் தான் மக்களின் பிரச்னை தீரும். நாங்கள் தட்டியதால் தான்.100 வேலை நாள் திட்ட பணம் கிடைத்தது.ஜாதிவாரி கணக்கெடுப்பு நிறைவேற்றியது..
மிரட்டல்
மக்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர். திமுக., தான் வேறு அணியில் உள்ளது. திமுக.,வில் உறுப்பினராக சேருங்கள் என கெஞ்சி பிச்சை எடுக்கும் அளவுக்கு அப்பாவும்,மகனும் கொண்டு வந்துவிட்டனர். உறுப்பினராக சேராதவர்களுக்கு உரிமைத்தொகை நிறுத்துவதாக கூறுகின்றனர். இவர்கள் நிறுத்தினால், நாங்கள் வழங்குவோம். நிறுத்தப்பட்ட மாதத்துக்கும் கணக்கு சபோட்ட சேர்ந்து வழங்குவோம்.எதற்கு அஞ்ச வேண்டாம். பயப்பட வேண்டாம்.தி.மு.க., சொல்வது எல்லாம் பொய். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உருட்டல் மிரட்டல்களில் தி.மு.க., ஈடுபடுகிறது. அ.தி.மு.க., மக்கள் பக்கம் நிற்கிறது. மக்கள் துன்பம் பிரச்னைகளை அறிந்து செயல்படும் அரசு அ.தி.மு.க., அரசு.
இபிஎஸ் மத்திய அரசை கண்டு பயப்படுவதாக சொல்கின்றனர்.பயம் என்றே சொல்லுக்கே தலைவணங்க மாட்டேன். ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை. மக்கள் தான் முக்கியம். மக்களுக்காக நானும், அதிமுக தொண்டர்கள் செயல்படுவார்கள்.
தனி பெரும்பான்மை
பா.ஜ.,உடன் திமுக., கூட்டணி அமைத்தால் சரி; அதிமுக அமைத்தால் தவறு என்கின்றனர். தி.மு.க.,வை அகற்ற பா.ஜ., உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. 2026 சட்டசபை தேர்தலில், அதிக ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் ஓட்டுக்கள் பெறும். தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு இபி.எஸ்., பேசினார்.