3.45 லட்சம் ஏக்கர் நெல் அறுவடை பணி நிலுவை வேளாண் துறை அமைச்சர் தகவல்
3.45 லட்சம் ஏக்கர் நெல் அறுவடை பணி நிலுவை வேளாண் துறை அமைச்சர் தகவல்
ADDED : அக் 24, 2025 12:22 AM
சென்னை: ''மாநிலம் முழுதும், 3.45 லட்சம் ஏக்கர் நெல் அறுவடை பணிகள் நிலுவையில் உள்ளன; இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வடகிழக்கு பருவமழை அக்., 16ல் துவங்கி, பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 51.8 லட்சம் ஏக்கரில் நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில், 12.3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 8.89 லட்சம் ஏக்கர் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 3.45 லட்சம் ஏக்கர் நெல் அறுவடை பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
சம்பா, தாளடி, பிசானம் பருவத்திற்கு தேவையான விதைகள், மறு நடவுக்கு தேவையான குறுகிய கால மற்றும் மத்திய கால நெல் ரகங்கள், தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாதாந்திர வினியோக திட்டத்தின்படி உர வினியோகம் செய்யப்படுவதை கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பயிர் சேதங்களை கண்காணிக்க, மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய பயிர்களில், 33 சதவீதத்திற்கு மேல் சேதம் அடைந்தால், பயிர் இழப்பீடு வழங்கப்படும்.
வேளாண்மை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து, பயிர் சேத பாதிப்பை கூட்டு கணக்கெடுப்பு செய்து, கலெக்டர்கள் வாயிலாக, அரசுக்கு அறிக்கை அனுப்ப உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை பெருமளவில் பதிவு செய்ய, களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

