தமிழகத்தில் அமல்படுத்தாதீங்க நடிகர் விஜய் வலியுறுத்தல்
தமிழகத்தில் அமல்படுத்தாதீங்க நடிகர் விஜய் வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2024 11:42 PM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: மதத்தால், மொழியால், ஜாதியால், உணர்வால் அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக இணைந்து உலகிலேயே கலாசாரம் நிறைந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறோம்.
இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் வாயிலாக மக்களை பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தே.மு.தி.க., என்றைக்கும் ஏற்காது. இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமையையும், பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிக முக்கியமானது.
இந்த சட்டத்தின் முழு விபரத்தையும், அனைத்து மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் மத்திய அரசு விளக்க வேண்டும். இந்த சட்டம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்தச் சட்டம், ஏற்புடையதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும். அதுவரை இந்த சட்டத்தை தே.மு.தி.க., ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை: சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் முருகன் பேட்டி: ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு பெயர் போனது தி.மு.க., ஆட்சி. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு 2,70,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் 22 கோடி பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, 'சிங்கார சென்னை 2.0' என, தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். யாருக்கு பயன், யாருக்கு எதிராக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டத்தால், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.

