பேரிடர் மீட்பு பணிக்கு அங்கீகாரம்; கவர்னரிடம் மீனவர்கள் கோரிக்கை
பேரிடர் மீட்பு பணிக்கு அங்கீகாரம்; கவர்னரிடம் மீனவர்கள் கோரிக்கை
ADDED : ஜன 16, 2024 11:02 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திற்கு வந்த கவர்னர் ரவியிடம் அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி உட்பட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் தெரிவித்துள்ளதாவது: துாத்துக்குடி, திருநெல்வேலி வெள்ள மீட்பு பணி மற்றும் கடந்த 2015, 2023 சென்னை வெள்ள மீட்பு பணியில் சம்பளம் வாங்காத ராணுவ வீரனாக, முதல் ஆளாய் நின்று உயிரை பணயம் வைத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை மீனவர்கள் காப்பாற்றி உள்ளனர். மீனவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் தமிழக அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை.வெள்ள மீட்பு பணியின் போது மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் .
துாத்துக்குடி வெள்ள மீட்பு பணியின் போது இறந்த மீனவர் ரபிஸ்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, தகுந்த இழப்பீடு அரசு வழங்க வேண்டும். மீட்பு பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அரசு வேலையில் முன்னுரிமை, மீனவர் மீட்பு படைக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும்.தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள புன்னைகாயலில் ஏற்பட்ட மண் அடைப்பை நீக்கி பல ஆயிரம் உயிர்களை காத்த, 13 மீனவர்களுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை அரசுக்கு பரிந்துரை செய்வதாக கவர்னர் தெரிவித்தார்.

