மதுரை:துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் தனி நபரிடம் உள்ள யானையை மீட்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
திருநெல்வேலி, ஸ்ரீகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி ேஷக் அலி. இவர், பீகம் என்ற யானையை, கேரளாவிலிருந்து கொண்டு வந்தார்; உரிய அனுமதி பெறவில்லை. அந்த யானைக்கு அவர் தான் உரிமையாளர் என்பதற்குரிய சான்று அவரிடம் இல்லை.
யானை சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பிச்சை எடுக்க, அந்த யானை பயன்படுத்தப்படுகிறது. யானையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், ேஷக் அலி அனுமதி பெறுவதில்லை. பல வகைகளில் யானையை துன்புறுத்துகிறார். யானையின் உடலில் காயங்கள் உள்ளன. பார்வை திறன் குறைந்துள்ளது. சட்டவிரோதமாக ேஷக் அலியின் கட்டுப்பாட்டில் யானை உள்ளது.
அதை மீட்டு, மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பக்கோரி தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில், 'ேஷக் அலி மீது வழக்கு பதியப்பட்டது. கைதாகி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். யானையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்கின்றனர். யானை நல்ல நிலையில் உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், துாத்துக்குடி மாவட்ட வன அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

