தமிழகத்தில் 72.09 % ஓட்டுப்பதிவு : கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 % குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35 %
தமிழகத்தில் 72.09 % ஓட்டுப்பதிவு : கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 % குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35 %
UPDATED : ஏப் 19, 2024 11:00 PM
ADDED : ஏப் 19, 2024 10:02 AM

சென்னை: தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி, 72.09% ஓட்டுகள் பதிவாகியுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 72.04 % ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. ஓட்டுச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்த மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதிகம் - மந்தம் எங்கே ?
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 % ஓட்டுகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 % ஓட்டுகளும் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:
கள்ளக்குறிச்சி 75.67
தர்மபுரி 75.44
சிதம்பரம் 74.87
பெரம்பலுார் 74.46
நாமக்கல் 74.29
கரூர் 74.05
அரக்கோணம் 73.92
ஆரணி 73.77
சேலம் 73.55
விழுப்புரம் 73.49
திருவண்ணாமலை 73.35
வேலுார் 73.04
காஞ்சிபுரம் 72.99
கிருஷ்ணகிரி 72.96
கடலுார் 72.40
விருதுநகர் 72.29
பொள்ளாச்சி 72.22
நாகப்பட்டினம் 72.21
திருப்பூர் 72.02
திருவள்ளூர் 71.87
தேனி 71.74
மயிலாடுதுறை 71.45
ஈரோடு 71.42
திண்டுக்கல் 71.37
திருச்சி 71.20
கோவை 71.17
நீலகிரி 71.07
தென்காசி 71.06
சிவகங்கை 71.05
ராமநாதபுரம் 71.05
துாத்துக்குடி 70.93
திருநெல்வேலி 70.46
கன்னியாகுமரி 70.15
தஞ்சாவூர் 69.82
ஸ்ரீபெரும்புதுார் 69.79
வடசென்னை 69.26
மதுரை 68.98
தென் சென்னை 67.82
மத்திய சென்னை 67.35
புதுச்சேரி - 78.45 %
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் - 56.68 %
தேர்தல் புறக்கணிப்பு
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டுச்சீட்டு மையத்திற்கு பூத் ஏஜென்ட் கூட வரவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்ற அதிருப்தியில் மக்கள் ஓட்டுப்பதிவை புறக்கணித்து உள்ளனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் 1,400 ஓட்டுகள் உள்ள நிலையில், இங்கு வெறும் 9 ஓட்டுகளே பதிவாகி உள்ளன. தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் அறிவித்து உள்ளதால், மக்கள் யாரும் ஓட்டளிக்க வரவில்லை.
அதேபோல், திருவள்ளூர் குமாரராஜ பேட்டை ஓட்டுச்சாவடியில் யாரும் ஓட்டளிக்கவில்லை. 6 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பட்டி கிராம மக்கள் ஓட்டுப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதி மக்கள் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதி கோரி திண்டுக்கல் மாவட்டம் சீரங்கம்பட்டி பகுதி மக்கள் , தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம், சாலை வசதி கேட்டு, கன்னியாகுமரி மாவட்டம் வலிய ஏலா கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணி கல்லூரணி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். மதியம் 1 மணி வரை 2 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குமாரகுடி, தெற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையாம்பட்டிபுத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கார்குடி கிராமம் மாதாகோயில் தெரு பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் உள்ள வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஹள்ளி கிராமத்தில் சாலை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா வழங்காத காரணத்தால் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலத்தேமுத்துப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இளம் வாக்காளர்கள் 8 பேரைத் தவிர வேறு யாரும் ஓட்டுப் போடவில்லை.
தேர்தல் மைய அதிகாரி அகற்றம்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் தேர்தல் மைய அதிகாரி, வாக்காளர்களை ஒருமையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை மாற்றி கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்து அந்த அதிகாரி இருக்கையில் அமர்ந்து இருந்தார். இருப்பினும், போலீசார் அந்த அதிகாரியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

