ஏப்., 15க்குள் 4ஜி சேவை பி.எஸ்.என்.எல்., அறிவிப்பு
ஏப்., 15க்குள் 4ஜி சேவை பி.எஸ்.என்.எல்., அறிவிப்பு
ADDED : மார் 03, 2024 03:36 AM

ராமேஸ்வரம், : -''தமிழகத்தில் ஏப்., 15க்குள் '4ஜி' நெட்வொர்க் சேவை துவக்கப்படும்,'' என, பி.எஸ்.என்.எல்., தலைமை பொதுமேலாளர் தமிழ்மணி தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில், பி.எஸ்.என்.எல்., தலைமை பொதுமேலாளர் தமிழ்மணி கூறியதாவது:
தமிழகத்தில், 6,000 பி.எஸ்.என்.எல்., தகவல் தொடர்பு டவர்கள் உள்ளன. இவை, 3ஜியில் இருந்து 4ஜி நெட்வொர்க் சேவைக்கு மாற்றப்பட உள்ளன.
தனியார் தகவல் தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட வேறு எந்த நிறுவனமும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தாத, 203 கிராமப் பகுதிகளை தேர்வு செய்து, 200 இடங்களில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைத்துள்ளோம்.
ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணியர் மற்றும் வணிக ரீதியான தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்தும் விதமாக இங்கு 4ஜி சேவை எளிதாக கிடைக்க அப்துல்கலாம் நினைவகம் அருகில், தனுஷ்கோடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் புதிய டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்ப கருவி பொருத்தியதும், தமிழகத்தில் 4 லட்சத்து 65,000 பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் 4ஜியில் பயன்பெறும். இங்கு ஏப்., 15க்குள் 4ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்படும்.
தனியாரின் 5ஜியும், பி.எஸ்.என்.எல்., 4ஜியும் சமமானது தான். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பொதுமக்கள் தற்போதைய 3ஜி சிம்முக்கு பதிலாக பி.எஸ்.என்.எல்., சேவை மையத்தில் 4ஜி சிம் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

