எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு
எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு
ADDED : செப் 26, 2024 02:32 AM

சென்னை:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆன்டனி ஜான்சன் ஜெயபால். அவர், 1987ல் தமிழக காவல் துறையில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்துள்ளார்.
அப்போதில் இருந்தே, சிறப்பு காவல் படையில் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., --- - எஸ்.பி., என்ற நிலைகளில் பணி புரிந்துள்ளார்.
அரசின் சார்பில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளுதல் தொடர்பாக, இரண்டு ஆண்டு உதவி பொறியாளர் என்ற படிப்பையும் முடித்து உள்ளார்.
தமிழக சிறப்பு காவல் படையில், 37 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள ஆன்டனி ஜான்சன் ஜெயபால், ஓய்வு பெற இருந்தார்.
ஆனால், 2023ல் சட்டசபையில், இந்திய காவல் பணி சாராத அலுவலர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு அளிக்கும் விதமாக, சிறு படைகலன் கமாண்டன்ட் என்ற பதவி, டி.ஐ.ஜி., நிலைக்கு தரம் உயர்த்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, ஆன்டனி ஜான்சன் ஜெயபாலுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் ஓராண்டுக்கு, மறு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

