"சின்னத்துக்கு இல்ல, என்னை வைத்தே ஓட்டு": மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய சீமான் பேட்டி
"சின்னத்துக்கு இல்ல, என்னை வைத்தே ஓட்டு": மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய சீமான் பேட்டி
ADDED : மார் 27, 2024 12:49 PM

சென்னை: 'சின்னத்துக்கு இல்ல, என்னை வைத்து தான் ஓட்டு' என மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய பின், சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். பின்னர் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார். நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:
விவசாயி சின்னத்திற்காக கடைசி வரை போராடினோம். ஆனால் கிடைக்கவில்லை. சின்னத்தை இழந்தாலும் நம் எண்ணத்தை இழந்து விடக்கூடாது. 40 தொகுதிகளிலும் மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். மைக் புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று. மைக் இல்லாமல் புரட்சியே இல்லை.
மக்கள் நலனே இலக்கு. ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டேன். நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சின்னம் விவகாரத்தில் எந்த பின்னடைவும் இல்லை. சின்னத்திற்காக கடைசி நொடி வரை போராடினோம். மக்கள் சின்னத்தை பார்க்க மாட்டார்கள். சீமானை தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., கூட்டணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படுகிறது.
7 விழுக்காடு ஓட்டு
கூட்டணி விவகாரத்தில் ஒருபோதும் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். என்னை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என நினைக்கிறார்கள். 7 விழுக்காடு ஓட்டுக்களை பெற்றதால், என்னை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். எனக்கு எந்த சின்னம் சரியாக இருக்கும் என தேர்தல் கமிஷனிற்கு தெரிந்துள்ளது.
எங்களை உரசினால் பற்றி எரிவோம்.எங்களை எரித்துக் கொண்டு உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்த தீப்பெட்டி சின்னத்திற்கு விண்ணப்பித்தேன்.விண்ணப்பித்த உடனே அந்த சின்னத்தையும் வேறொருவருக்கு கொடுத்துவிட்டார்கள். சின்னத்தில் வென்றுவிடலாம் என நினைப்பவர்களை என்ன சொல்வது?. இவ்வாறு அவர் கூறினார்.

