2025ம் ஆண்டு ஜூனில் 2வது தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
2025ம் ஆண்டு ஜூனில் 2வது தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
UPDATED : மார் 16, 2024 02:47 PM
ADDED : மார் 16, 2024 11:13 AM

சென்னை: '2வது தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் திமுக அரசின் முயற்சிகளாகும்.
மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி 12ம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024ம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.
“இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ., எடுத்த நடவடிக்கை என்ன?
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?. கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ., அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?. அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த மத்திய பா.ஜ., அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?. படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?
இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ, ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. இதற்கெல்லாம் பதிலில்லை. விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?. தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

