தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை: சபாநாயகர்
தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை: சபாநாயகர்
UPDATED : பிப் 12, 2024 05:37 PM
ADDED : பிப் 12, 2024 10:39 AM

சென்னை: ''ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக சட்டசபையில் கவர்னர் உரையை தமிழில் வாசித்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று (பிப்.,12) கவர்னர் உரையுடன் துவங்கியது. உரையின் துவக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், உரையில் இடம்பெற்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதாக படிக்கவில்லை எனவும் கூறி 3 நிமிடங்களில் தனது உரையை முடித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. பின்னர் ஆங்கிலத்தில் இருக்கும் கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: தமிழக அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது. ஜன.,7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு வளர்ச்சிக்கு உதாரணம். தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. குற்ற செயல்களை தடுப்பதில் அரசு சமரசமற்ற அடக்கு முறையை கடைப்பிடித்து வருகிறது.
வளர்ச்சி பாதை
ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் மேலான பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. சென்னை, அதன் சுற்றுவட்டார பகுதியில் பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.19,692 கோடி நிதி தேவை.
ஜிஎஸ்டி.,யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முதல்வரின் அயராத முயற்சியால் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது, தமிழக பொருளாதாரம் வேகமாக வளர்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் அமல்படுத்தப் போவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை காப்பதில் அரசு முன்னுரிமை கொடுக்கிறது.
மீன்பிடி உரிமை
2025ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 242 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமையை நிலை நாட்ட தொடர்ந்து போராடுவோம்.
சமூக நல்லிணக்கம்
கிண்டியில் குறுகிய காலத்தில் ஆயிரம் படுக்கைகளுடன் கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.218 கோடி செலவில் மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கிறது. முந்தைய ஆண்டுகளை விட 203 சதவீதம் அதிகமாக தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு பல்வேறு சமூக ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சமூக நீதி
ரூ.4,861 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது.
குடிநீர் இணைப்பு
1.65 லட்சம் மையங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ.18,228 கோடி மதிப்பீட்டில் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 2023-24ம் ஆண்டில் 14 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.19,662 கோடி நிதி தேவைப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.7 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.
தேசிய கீதம் இறுதியில் பாடுவதே மரபு
சட்டசபை துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது தான் மரபு. சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் உயர்ந்த பொறுப்பில் உள்ள கவர்னர் கண்ணியமாகவே நடத்தப்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
பிப்.,22 வரை கூட்டத்தொடர்
பின்னர் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''பிப்.,13, 14, 15 ஆகிய நாட்களில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். பிப்.,19ல் 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், பிப்.,20ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 22ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். கவர்னரின் சொந்த கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது'' என்றார்.

