ADDED : டிச 10, 2024 03:33 AM
சென்னை: ''கடந்த, 2021 ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை, 544 முழு நேர, 1,126 பகுதி நேரம் என, மொத்தம், 1,670 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சட்டபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பெரியபுள்ளான் செல்வம்: மேலுார் தொகுதி கம்பூர் ஊராட்சி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படுமா?
அமைச்சர் பெரியகருப்பன்: மதுரை மாவட்டம் மேலுார் கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட, கேசம்பட்டி தொடக்க கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில், பெரிய கற்பூரம்பட்டி முழு நேர ரேஷன் கடை, 567 கார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதில், சின்ன கற்பூரம்பட்டியில், 282 கார்டுகள் உள்ளன. பகுதி நேர புதிய கடை பிரிக்கப்பட்ட பின், தாய் கடையில், 285 கார்டுகள் மட்டுமே இருக்கும். தாய் கடைக்கும், புதிய கடை கோரும் கிராமத்திற்கும் இடைப்பட்ட துாரம், அரை கி.மீ., ஆகும்.
அரசு ஆணையின்படி, இரு கடைகள் இடையே, 1.50 கி.மீ., துாரமும், 500 கார்டுகளும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சின்ன கற்பூரம்பட்டியில் பகுதி நேர புதிய ரேஷன் கடை அமைக்க வழிவகை இல்லை.
தற்போது தமிழகம் முழுதும், 34,793 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன; 2021 ஏப்., முதல் இந்தாண்டு நவம்பர் வரை, 544 முழு நேர கடைகள், 1,126 பகுதி நேர கடைகள் என, 1,670 ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

