'தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால் எந்த நன்மையும் கிடைக்காது!'
'தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால் எந்த நன்மையும் கிடைக்காது!'
ADDED : ஏப் 16, 2024 09:47 PM
சென்னை:'மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. இதனால், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிப்பதால், எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி தெரிவித்துஉள்ளார்.
அவரது அறிக்கை:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 1984க்கு பின், எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைத்ததில்லை.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு பின், 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைத்தது. 2019ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.,வுக்கு முன்பை விட, அதிக இடங்களுடன் தனி பெரும்பான்மை கிடைத்தது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இது பெரும் சாதனை. மூன்றாவது முறையாக, 370க்கும் அதிகமான இடங்களில் வென்று, மோடி பிரதமராவார் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. இது, மோடி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று.
மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. இதனால், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிப்பதால், எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை.
எனவே, தமிழக மக்கள் பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டளிப்பதே தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் நன்மை பயக்கும்.
இந்தியாவில், மோடி ஆட்சியில் தான் முதல்முறையாக மத்திய அமைச்சரவையில் பட்டியல் இனத்தவர், 12 பேர்; பழங்குடியினர், 8; பிற்படுத்தப்பட்டோர், 27; பெண்கள், 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி. அதை நிலைநாட்டி இருக்கிறது மோடி அரசு. எனவே, மீண்டும் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
மோடி ஆட்சியில், 'நீட்' தேர்வு உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

