பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் ஐகோர்ட் கேள்வி
பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் ஐகோர்ட் கேள்வி
ADDED : ஏப் 25, 2024 01:51 AM

சென்னை:'வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை எனும்போது, பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமை தனக்கு உள்ளது என்பதால், 4,500க்கும் மேற்பட்ட தன் பாடல்களை பயன்படுத்த, 'எக்கோ ரிக்கார்டிங்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
உரிமை
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரிக்கார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்திருந்தது.
உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி, எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள், மனுக்கள் தாக்கல் செய்தன.
தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், படங்களின் பதிப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும், மனுக்களில் கூறப்பட்டன.
இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.
எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ''இசையமைப்புக்காக, இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது.
''அதனால், தயாரிப்பாளருக்கு அதன் உரிமை சென்று விடும். தயாரிப்பாளர்களிடம் இருந்து, நாங்கள் உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் எங்களுக்கு சொந்தமாகி விட்டன,'' என்றார்.
இதற்கு, இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ''இசையமைப்பு என்பது அவரது படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது,'' என்றார்.
கட்டுப்பட்டது
அப்போது நீதிபதிகள், 'அப்படி என்றால், ஒரு பாடல் எப்படி உருவாகிறது. பாடல் வரி, பாடுபவர் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது.
'வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை எனும்போது, பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்' என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து விசாரணையை, ஜூன் இரண்டாம் வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இளையராஜா மேற்கொள்ளும் வணிக பரிவர்த்தனை, இந்த வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

