விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலைப்பணி ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலைப்பணி ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து
ADDED : ஜூலை 22, 2024 05:49 AM
சென்னை : 'விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்க பணியை திட்டமிட்டபடி முடிக்காததால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு:
விக்கிரவாண்டி- -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள், 2017ல் துவங்கின.
மூன்று கட்டங்களாக நடந்து வரும் பணிகள் திட்டமிட்டபடி நிறைவு பெறவில்லை. பின்னலுாரில் இருந்து தஞ்சாவூர் வரையிலான சாலை விரிவாக்கப்பணி மந்த கதியில் நடக்கிறது. எனவே, நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை, விக்கிரவாண்டி -- தஞ்சாவூர் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
சாலை பணிகளை விரைவாக முடிப்பதுடன், அதிகாரிகளுக்கு அளித்த புகார் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சார்பில், தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளர் பி.செல்வகுமார், நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் விபரம்:
விக்கிரவாண்டி- - சேத்தியாத்தோப்பு, சேத்தியாத்தோப்பு - சோழபுரம், சோழபுரம் - -தஞ்சாவூர் என, மூன்று கட்டங்களாக, 164.28 கி.மீ., தொலைவுக்கு பணிகள் நடக்கின்றன. 2020ல் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
நிலம் கையகப்படுத்துதல், வீராணம் குடிநீர் வினியோக குழாய்கள் இடமாற்றம், வெள்ளம், கஜா புயல், கொரோனா பொது முடக்கம் உள்ளிட்ட பல காரணங்களால், பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்பட்டது.
மூன்று கட்டங்களில், விக்கிரவாண்டி- - சேத்தியாத்தோப்பு இடையே, 65.96 கி.மீ., சாலை விரிவாக்க பணிக்கான ஒப்பந்தம், 2018 மார்ச் 20ல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனங்கள் இடையே போடப்பட்டது.
அந்த ஒப்பந்தப்படி, கடந்த மே 31க்குள் பணிகளை முடித்திருக்க வேண்டும். இதுவரை, 47.85 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு, ஒப்பந்த நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.
எனவே, ஜூன், 24ல் ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் பணிகள் துவக்கப்படவில்லை என்பதே ரத்துக்கு காரணம். மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட பணிகள் வரும் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். மீதமுள்ள இரண்டு கட்ட பணிகளை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஏற்ற உயர் நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 5க்கு தள்ளி வைத்துள்ளது.

