ADDED : மே 27, 2024 03:54 AM
சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. எனவே, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளன.
கேரட், பீன்ஸ், பீட்ரூட், அவரைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொத்துமல்லி விளைச்சலும் கோடை மழையால் பாதித்துள்ளது. இதனால், அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மழையால் தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் விலை சந்தையில் வேகமாக உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ தக்காளி 50 - 60 ரூபாய்க்கும், பெங்களூரு தக்காளி, 60 - 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் கிலோ 15 - 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது 40 - 45 ரூபாய்க்கும்; சின்ன வெங்காயம் 60 - 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. காய்கறிகளை தொடர்ந்து, தமிழக உணவுகளில் பிரதானமாக இடம் பெறும் வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து வருவது, நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

