இது உங்கள் இடம்: தொண்டர்களே... என்ன செய்ய போகிறீர்கள்?
இது உங்கள் இடம்: தொண்டர்களே... என்ன செய்ய போகிறீர்கள்?
ADDED : ஏப் 04, 2024 12:04 AM

உலக, தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
எம்.எஸ்.ரவி சங்கர், ைஹதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் தான் காணாமல் போய்விட்டனர் என, கனிமொழி கூறியிருக்கிறார்.
அழிக்கப்படுவதற்கு, தி.மு.க., எங்கே இருக்கிறது... அது தான் கருணாநிதியின் குடும்ப கட்சியாகி, 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே!
கடந்த, 1969ல், கருணாநிதி முதல்வராக பதவியேற்றது, 1971ல் மதுவிலக்கு ரத்தானது, 1972ல் புரட்சித் தலைவரை தி.மு.க.,விலிருந்து வெளியேற்றியதுடன், 'சென்னையில் கருணாநிதி, டில்லியில் மாறன்' என, இவ்விரு குடும்பங்களின் கட்டுப்பாட்டில் கட்சி வந்தது, முதல் இன்னிங்ஸ்.
கடந்த, 1982ல் ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர், 1984 முதல் எம்.எல்.ஏ., 1996 - 2003 காலத்தில், போனசாக சென்னை மேயர் பதவி, 2006ல் துணை முதல்வர் என்ற பெயரில் பதவி, இவருக்குப் போட்டியாக இருந்த வைகோ, கட்சியிலிருந்து வெளியேற்றம் என, இரண்டாவது இன்னிங்ஸ்.
ஒரு இடைச்செருகல்...
சுதந்திரம் கிடைத்த அடுத்த நாளே, நேருவைக் கூப்பிட்டு காந்தி, காங்கிரசைக் கலைத்து விடுமாறு அறிவுறுத்தினார். நேரு கேட்கவில்லை. கட்சியைக் கையகப்படுத்தினார்.
பின்னால் வந்த இந்திரா, கட்சியை தன் வசப்படுத்த, அதை இரண்டாகப் பிளந்து, 1969ல் 'மனசாட்சி ஓட்டு' என நாடகமாடி வெற்றி கண்டார். இப்போது, பேரன் ராகுல் வரை அது தொடர்கிறது.
இப்பொழுது, தி.மு.க.,வும் சரி, காங்கிரசும் சரி, 'கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம்' என்றும், 'நேரு சோனியா குடும்ப கட்சி' என்றும், தம் கட்சிப் பெயர்களை மாற்றி விடலாம்.
இந்த இரு கட்சித் தொண்டர்களே... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

