'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
UPDATED : மார் 24, 2024 08:57 PM
ADDED : மார் 24, 2024 01:24 AM

சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை தரும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில். மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்று, கல்வியாளர்களின் ஆலோசனைகளை பெற்றனர்.
இனிதே துவக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்துள்ள மாணவர்கள், அடுத்து உயர்கல்வியில் சேருவதற்கு ஆலோசனை தரும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, இந்த ஆண்டு கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கியது.
கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, கண்காட்சி அரங்கத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். காலை, 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.
கருத்தரங்கில் பல்வேறு துறை கல்வியாளர்கள் பங்கேற்று, உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ - மாணவியரும், பெற்றோரும் ஆர்வமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்த மாணவ - மாணவியருக்கு வினாடி - வினா நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் பரிசாக வழங்கப்பட்டன.
கண்காட்சியில், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அங்கு சென்ற மாணவ - மாணவியருக்கு, புதிய படிப்புகள் குறித்து, கல்லுாரி பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் சார்பில் உருவாக்கப்பட்ட முதல் சூரியசக்தி கார் மற்றும் குகா என்ற நிறுவனத்தில் ரோபோ, ட்ரோன் செயல்முறை போன்றவை, கண்காட்சியில் இடம் பெற்றன.
நிறுவனங்கள் பங்களிப்பு
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகியன, இந்த நிகழ்ச்சியின் பவர்டுபை நிறுவனங்களாக செயல்படுகின்றன.
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிரின்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி மற்றும் ஷிவ் நாடார் பல்கலை ஆகிய நிறுவனங்கள், இணைந்து செயல்படுகின்றன.
வழிகாட்டி நிகழ்ச்சியின் விரிவான தகவல்களை, https://kalvimalar.dinamalar.com/index.asp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மொழிகள் அறிவோம்
''பெற்றோர் தங்கள் எண்ணங்களை திணிக்காமல், பிள்ளைகளின் விருப்பமான படிப்புகளை கேட்டு, கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். எல்லா படிப்பும் முக்கியமானது தான். மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு, கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வது, சர்வதேச அளவிலான வேலைவாய்ப்புக்கு உதவும்.
எஸ்.மலர்விழி,
தலைவர், நிர்வாக அறங்காவலர்,
கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம்.

