மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் நிதி ஒதுக்காததால் இழுபறி
மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் நிதி ஒதுக்காததால் இழுபறி
ADDED : ஜூன் 14, 2024 02:08 AM
சென்னை:குறுவை பருவ நெல் சாகுபடிக்கான, மாற்றுப் பயிர்கள் திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய் ஒதுக்காததால், பணிகள் இழுபறியாகவுள்ளன.
பாசன நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. பருவ மழை பொய்ப்பு, அண்டை மாநிலங்களில் இருந்து முறைப்படி நீர் கிடைக்காததே, இதற்குப் பிரதான காரணம். பருவமழை இல்லாத காலங்களில், நீர்த்தேவை குறைந்த பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும்.
எனவே, நீர்த்தேவை குறைந்த பயிர்களை, மாற்றுப் பயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்க, வேளாண் துறை முடிவெடுத்து உள்ளது. இதற்காக, கார், குறுவை, சொர்ணவாரி ஆகிய மூன்று நெல் சாகுபடி பருவங்களில், மாற்றுப் பயிர்கள் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவங்களில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்கப்படுத்த, 16.25 கோடி ரூபாய் செலவில் மானிய உதவிகள் வழங்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டு இருந்தது. குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கிய நிலையில், மாற்றுப் பயிர் சாகுபடி திட்டத்திற்கு, இதுவரை அரசு நிதி ஒதுக்கவில்லை.
இதனால், மாற்றுப் பயிர் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள், வழக்கம் போல, நெல் சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். வேளாண் துறையில் இருந்து இத்திட்டத்திற்கு நிதி கேட்டு, நிதித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நிதித்துறை இன்னும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்யவில்லை என, வேளாண் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மாற்றுப் பயிர்கள் சாகுபடி திட்டம் இழுபறியாக உள்ளதால், விவசாயிகள் மட்டுமின்றி, வேளாண் துறையினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

