சந்துரு அறிக்கையை அரசு நிராகரிக்க தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தல்
சந்துரு அறிக்கையை அரசு நிராகரிக்க தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 09:22 PM
சென்னை:'ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை, தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்திற்கு எதிரானது. அந்த அறிக்கையை, தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் தலைவர் முத்துரேமஷ், முதல்வர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
நெற்றியில் திலகமிடுவது, திருநீறு பூசிக்கொள்வது, கையில் வண்ண கயிறு கட்டிக் கொள்வது, மோதிரம் அணிவது, தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரம். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பது இறை நம்பிக்கை. மக்களின் நம்பிக்கைகளை சீரழிக்க, யாருக்கும் உரிமை இல்லை.
மக்களின் நம்பிக்கைகளை கெடுக்கும் வகையில், நீதிபதி சந்துரு தன் அறிக்கையில், மாணவர்கள் நெற்றியில் திலகமிடுவது, திருநீறு பூசிக்கொள்வது, வண்ணக் கயிறு கட்டிக் கொள்வது, மோதிரம் போடுவது போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது, ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
மாணவர்கள் மத்தியில், ஜாதி ரீதியான மோதல்களை தடுக்க, ஜாதி ரீதியான இடஒதுக்கீடுகளை, முற்றிலும் ஒழிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்கள் தொகைக்கேற்ப, 100 சதவீத பொருளாதார இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி செய்தால், தமிழகத்தில் ஜாதி ரீதியான மோதல்கள் முற்றிலும் நடக்காது.
கடந்த 1850ம் ஆண்டில் இருந்து இன்று வரை, ஜாதி, மத, இன வேறுபாடின்றி, பள்ளி, கல்லுாரிகள் நடத்தி, சமூக நீதிக்கும், சமூக ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வது, நாடார் சமுதாயம்.
எங்கள் பள்ளி, கல்லுாரிகளில், நாடார் சமுதாயத்தின் பெயரை, எக்காரணம் கொண்டும் நீக்கக்கூடாது. தமிழ் சமுதாயத்தின் பண்பாடு, கலாசாரத்திற்கு எதிரான, நீதிபதி சந்துருவின் அறிக்கையை, தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

