சூரியவீடு இலவச மின் திட்டம் பண வசூலை நிறுத்த கோரிக்கை
சூரியவீடு இலவச மின் திட்டம் பண வசூலை நிறுத்த கோரிக்கை
ADDED : மார் 24, 2024 12:37 AM
சென்னை:தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதியின் அறிக்கை:
கடந்த, 7ம் தேதி, 10,158 கோடி ரூபாய் செலவில், வடசென்னை - 3 அனல் மின் நிலையத்தில், மின் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 800 மெகா வாட் மின் உற்பத்தி திறன் உடைய இந்த மின் நிலையத்தில் இருந்து, உடனே மின் உற்பத்தி துவக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை ஒரு யூனிட் கூட உற்பத்தி செய்யவில்லை என்ற உண்மை அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், முதல்வர் ஸ்டாலினும் விளக்கம் அளிக்க வேண்டும்.
நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளுக்கு பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டம், மத்திய அரசால் துவக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, நாடு முழுதும் எந்த மாநிலத்திலும் கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் விண்ணப்பம் செய்யும் போதே, ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது, இத்திட்டத்தின் அடிப்படையையே சீர்குலைக்கும் செயல்.
வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்க வழிவகை செய்வதுடன், வீடுகளில் சூரிய மின் அமைப்புகளை நிறுவ, மத்திய அரசு மானியம் அளிக்கிறது.
இந்நிலையில், தமிழக மக்களை தி.மு.க., அரசு வஞ்சிப்பது, தண்டிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் இலவச திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதை, தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் என, ஸ்டாலினும், தங்கம் தென்னரசும் உத்தரவிடுவார்களா அல்லது இதுதான், 'திராவிட மாடல்' என்று மார்தட்டி கொள்வார்களா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

