ADDED : ஏப் 23, 2024 12:26 AM
சென்னை: தமிழகத்தை சேர்ந்த குகேஷ், 'கேண்டிடேட்ஸ் செஸ்' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு, முதல்வர் ஸ்டாலின், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: வியத்தகு சாதனையை புரிந்துள்ள குகேஷுக்கு பாராட்டுக்கள். 17 வயதில், 'கேண்டிடேட்ஸ் செஸ்' தொடரின் மிக இளவயது சேலஞ்சர் ஆக வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி பெறும் முதல் வீரராக சாதித்துள்ளார். அடுத்து டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும், அவர் வெற்றி வாகை சூட வாழ்த்துகள்.
வாசன்: செஸ் போட்டியில் உலக சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் செஸ் கனடாவின் டொரன்டோ நகரில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 8 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று, சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது. 17 வயதாகும் குகேஷ், உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது; நம் நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

