மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
ADDED : மார் 27, 2024 11:42 PM
சென்னை:அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீது, மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார்.
செந்தில் பாலாஜி சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், வழக்கறிஞர் மா.கவுதமன், அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த மனு மீதான உத்தரவு, இன்று பிறப்பிக்கப்படும் என, தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது, மீண்டும் வாதிட அனுமதி கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனுவில், 'வழக்கு தொடர்பாக, நாங்கள் கோரிய ஒரு சில வங்கி ஆவணங்களை வழங்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுபடி, அந்த ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
'கோரிய ஆவணங்கள் கிடைத்ததும், அதன்படி வாதாட அனுமதிக்க வேண்டும். எங்கள் தரப்புக்கு வாதாட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை எனில், அது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும்' என, கூறப்பட்டுள்ளது.

