ADDED : ஏப் 16, 2024 04:45 AM
சென்னை : பிரபல நகைக்கடை ஒன்றில், 28.531 கிலோ தங்க நாணயங்கள் வாங்கி மோசடி செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில், என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் சந்தோஷ்குமார் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீத்தர் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வியாபார நிமித்தமாக எங்களை அணுகினர். எங்கள் கடையில், 2020 ஜூலை 14ல் இருந்து, 2023 டிச., 31ம் தேதி வரை, 38.6 கிலோ தங்க நாணயங்கள் வாங்கினர். 9.475 கிலோ தங்க நாணயத்திற்கு பணம் கொடுத்து விட்டனர்.
மீதமுள்ள, 28.531 கிலோ தங்க நாணயத்திற்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதன் தற்போதைய மதிப்பு, 17 கோடி ரூபாய்.
கூட்டு சதி செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்க நாணயங்களை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மோசடி உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

