ADDED : மார் 24, 2024 02:19 AM
சென்னை:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜெயக்குமார். இவர், பள்ளி கட்டடம் கட்ட நிலம் வாங்கி உள்ளார்.
அந்த நிலத்தை பள்ளி கட்டடம் கட்டாமல், வீட்டு மனைகளாக மாற்ற திட்டமிட்டு, நிலத்தை வகை மாற்றம் செய்து தரும்படி, மாவட்ட நகரமைப்பு திட்டத்துறை உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அந்த மனு மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வீட்டு மனையாக மாற்றி பட்டா வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மாவட்ட கலெக்டர், வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், நகரமைப்பு திட்டத்துறை உதவி இயக்குனர், தாசில்தார் ஆகியோர், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்கள் சார்பாக, தாசில்தார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனுவை நிராகரிக்க வேண்டும்; கலெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும், தேவையின்றி பதில் மனுத்தாக்கல் செய்த தாசில்தாருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, அவரது ஊதியத்தில் இருந்து பிடித்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்கும்படி கூறி, வரும் 27ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

