அரசியல் ஆதாயத்திற்காக கச்சத்தீவு பிரச்னையை பேசும் கட்சிகள்: பழனிசாமி கிருஷ்ணகிரியில் பழனிசாமி பேச்சு
அரசியல் ஆதாயத்திற்காக கச்சத்தீவு பிரச்னையை பேசும் கட்சிகள்: பழனிசாமி கிருஷ்ணகிரியில் பழனிசாமி பேச்சு
ADDED : ஏப் 02, 2024 11:36 PM

கிருஷ்ணகிரி:''கச்சத்தீவு பிரச்னையை பேசி, பா.ஜ., மற்றும் தி.மு.க., கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரியில் அவர் பேசியதாவது:
பல கட்சிகள் இன்று கச்சத்தீவு பற்றி பேசுகின்றன. கடந்த, 1974ல் கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்தபோது மத்தியில், காங்., ஆட்சி, மாநிலத்தில், தி.மு.க., ஆட்சி. கடந்த, 2008ல் கச்சத்தீவை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நடந்த போதும், காங்., - தி.மு.க., ஆட்சிகள் தான். கச்சத்தீவை மீட்டெடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம் எழுதினார்; நேரில் கோரிக்கை வைத்தார். ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக, பா.ஜ., அரசு கச்சத்தீவை கண்டு கொள்ளாமல், தற்போது அரசியல் ஆதாயத்திற்காக கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவை மீட்க போராடிய ஒரே கட்சி, அ.தி.மு.க., தான்.
மன்னர் ஆட்சி போல கருணாநிதி குடும்பம் தமிழகத்தை ஆள நினைக்கிறது. தமிழகத்தில் அது நடக்காது; இது ஜனநாயக நாடு.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம், 21 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
அதை, தி.மு.க., அரசு இன்னும் திறக்கவில்லை. 233 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெக்கொள் கால்வாய் திட்டத்தை அறிவித்தோம். அப்பணிகளையும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
எனவே, அ.தி.மு.க., ஆட்சிதான் பொற்கால ஆட்சி. இதுபோல், தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா?
வால்மீகி இன மக்கள் தங்களை, எஸ்.டி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும், நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணாரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

