'தேர்தலுக்கு பின் பா.ஜ.,வுக்கு தலைவராவார் பன்னீர்செல்வம்!'
'தேர்தலுக்கு பின் பா.ஜ.,வுக்கு தலைவராவார் பன்னீர்செல்வம்!'
ADDED : ஏப் 15, 2024 12:52 AM
சென்னை: ''பா.ஜ.,வால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தமிழகமும் வளர்ச்சி அடையவில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இந்தியா பலதரப்பட்ட கலாசாரம் உடைய, பல்வேறு இன மக்கள் வாழும் நாடு. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அ.தி.மு.க., அனுமதிக்காது.
தேர்தலுக்கு பின், பா.ஜ.,வுக்கு பன்னீர்செல்வம் தலைவராக இருப்பார்; தினகரன் பொதுச்செயலராக இருப்பார். அ.தி.மு.க., அடிப்படை ஓட்டு வங்கி ஒரு நாளும் சரியவில்லை. கடந்த 2019, 2021 தேர்தல்களில், பா.ஜ., கூட்டணி காரணமாக, சிறுபான்மை மக்கள் எங்களுக்கு ஓட்டளிக்கவில்லை. இந்த தேர்தலில் ஓட்டளிப்பர்.
சென்னை ராயபுரத்தில் நான், 25 ஆண்டுகள் தோற்காமல் இருந்தேன். பா.ஜ.,வால் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தேன். தற்போது, பா.ஜ., கூட்டணி இல்லாததால், சிறுபான்மையினர் ஓட்டு எங்களுக்கு வரும். பிராமணர்கள் சிந்தித்து செயல்படுவர்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி அடையவில்லை. அ.தி.மு.க.,வுக்கும், - தி.மு.க.,வுக்கும் தான் போட்டி. தி.மு.க., பிராமணர்களுக்கு எதிரி. அவர்களை தி.மு.க., கொச்சைப்படுத்தி உள்ளது.
முன்னேறிய சமுதாய மக்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காமல் பிறருக்கு ஓட்டு போட்டால், அது, தி.மு.க.,வுக்கே உதவும். எனவே, பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு தங்கள் ஓட்டை 'வேஸ்ட்' செய்ய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

