கொடைக்கானலில் வாகன சோதனைக்கு கூடுதல் பணியாளர் நியமிக்க உத்தரவு
கொடைக்கானலில் வாகன சோதனைக்கு கூடுதல் பணியாளர் நியமிக்க உத்தரவு
ADDED : ஏப் 14, 2024 11:20 PM
சென்னை : வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி இடம் பெற்ற சிறப்பு அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொடைக்கானல் பகுதிகளில், சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதைத் தடுக்க, அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில், தனி வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் நுழைவதை தடுக்கும் வகையில், இந்த வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு நுழையும் பகுதியில் உள்ள ஒன்பது கிராமப்புற பஞ்சாயத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை கண்காணிக்க, 'செக் போஸ்ட்' கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன், இங்கு 'ஷிப்ட்' முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
அரசு, தனியார் பஸ்கள், டூவீலர்கள், சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா என, சோதனை நடத்தப்படுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில், 59 கிலோ பிளாஸ்டிக் கவர், 631 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக 6,700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு, 60 பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை, தாக்கல் செய்த அறிக்கை வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், வரும் கோடை சீசனில் சுற்றுலா பயணியர் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.
இதை கருத்தில் கொண்டும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக கொடைக்கானலை மாற்றவும், சுற்றுலா வரும் ஒவ்வொரு வாகனத்திலும் சோதனை நடத்தும் வகையில், வாகன சோதனை சாவடிகளில் ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மலைவாசஸ்தலங்களுக்குள் நுழையும் அனைத்து இடங்களிலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல, தேனி மாவட்டம் மேகமலையையும் பிளாஸ்டி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற, அங்குள்ள அனைத்து வாகன சோதனை சாவடிகளில், அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய, போதிய பணியாளர்கள் இருக்கின்றனரா என, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்து தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜூன் 7க்கு விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

