பொதுச்சொத்தை சேதப்படுத்திய 11 பேருக்கு ஓராண்டு சிறை உறுதி
பொதுச்சொத்தை சேதப்படுத்திய 11 பேருக்கு ஓராண்டு சிறை உறுதி
ADDED : ஏப் 10, 2024 02:39 AM

சென்னை: பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில், 11 பேரின் ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் மற்றும் டாக்டர் அழகப்பா சாலை சந்திப்பில், 2012 ஜூன் 18ல் கல்லுாரி மாணவர்கள் சிலர், கற்கள், உருட்டு கட்டைகளுடன் கூடியிருந்தனர்.
அப்போது, திடீரென மாணவர்களில் சிலர், அப்பகுதி வழியாக சென்ற மாநகர பஸ்கள், கார்கள் மீது கற்களை வீசினர். இதில், பஸ், கார் கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து, வேப்பேரி போலீசார், தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் மற்றும் அழிவு தடுப்பு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், கார்த்திக்; யானைகவுனியை சேர்ந்த சரத்குமார் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்திய குற்றத்துக்காக, அனைவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் சட்ட விரோதமாக ஆயுதங்களுடன் கூடிய குற்றத்துக்கு, மொத்தம், 18,750 ரூபாய் அபராதம் விதித்து, 2020 மார்ச் 9ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட 23வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், அனைவரும் மேல்முறையீடு செய்தனர். போலீசார் சார்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.செந்தில் ஆஜரானார்.
விசாரணையின் போது, சரத்குமார், விஜய், ராஜேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மீதமுள்ள 11 பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ராஜ்குமார் பிறப்பித்த உத்தரவு:
விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எவ்வித முகாந்திரமும் இல்லை.
சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன; குற்றத்தில் ஈடுபட்டவர்களும், தற்போது குடும்பம் என்ற கட்டமைப்பில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற, மனுதாரர்களின் தரப்பு வாதம் ஏற்புடையது அல்ல.
மேல்முறையீடுதாரர்கள் சாலையில் ஒன்று கூடி, காட்டுமிரண்டித்தனமாக நடந்ததோடு, பொது போக்குவரத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். பொது மக்களிடம் பயத்தை உண்டாக்கி, அமைதியை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு, இந்த நீதிமன்றம் கருணை காட்டினால், அது சமூகத்துக்கு தவறான சமிக்ஞையை ஏற்படுத்திவிடும்; வளர்ச்சியையும் பாதிக்கும் எனவே, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

