சென்னையில் என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் துப்பு கிடைக்குமா?
சென்னையில் என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் துப்பு கிடைக்குமா?
ADDED : மே 14, 2024 03:34 PM

சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு மேலாக குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய, அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில், மார்ச் 1ல், குண்டு வெடிப்பு நடந்தது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பதுங்கி இருந்த, எஸ்.ஐ., பயங்கரவாதிகள் முஸாவீர் ஹுசைன் ஷாகிப்,30; அப்துல் மதீன் அகமது மதீன் முகமது தாஹா,30 ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், 10 நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் கைதான, 2 பேர் சென்னையில் தங்கி இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்துள்ளனர். அவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த இருவருக்கு உதவியவர்களை என்.ஐ.ஏ., சென்னையில் தீவிரமாக தேடி வருகிறது.
இருவரின் வலது கரமாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த, 33 வயது வாலிபர் செயல்பட்டுள்ளார். அதேபோல, வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லையில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரும் அடைக்கலம் கொடுத்துள்ளார். இருவரும் தலைமறைவாக உள்ளனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் துப்பு கிடைக்குமா? என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

