மனைவி கொலையில் சிக்க வைக்கப்பட்டதால் மன உளைச்சல் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் நல்லாசிரியர் மனு
மனைவி கொலையில் சிக்க வைக்கப்பட்டதால் மன உளைச்சல் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் நல்லாசிரியர் மனு
ADDED : ஜூன் 15, 2024 09:21 PM
'மனைவியை கொலை செய்ததாக தன்னைத் தவறாக கைது செய்த போலீசார், 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் நடராஜன். அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, 2017ல் ஓய்வு பெற்றார். பணியில் இருந்த போது, மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
தவறான விசாரணை
கடந்த 2019 டிசம்பர், 6ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில், கும்பாபிஷேக நிகழ்வுக்கு நடராஜன் சென்று விட்டார். மீண்டும் காலை, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, அவரின் மனைவி இந்திரா கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த, 35 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இந்த வழக்கில், நடராஜன் மீது அவரது மனைவியின் சகோதரர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மனைவியை கொன்றதாக நடராஜன் கைது செய்யப்பட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்திரா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் வேறு சிலர் என தெரியவந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். 'போலீசாரின் தவறான விசாரணையால் தான் சிறை செல்ல நேரிட்டது. போலீசார் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்பத்திரிகை
மனுவில், அவர் கூறியுள்ளதாவது:
மனைவி இந்திரா கொலை வழக்கில், என்னை குற்றவாளியாக்கி, 2019 டிச., 10ல் சிறையில் அடைத்தனர்; 2020 பிப்., 6ம் தேதி ஜாமினில் வெளியே வந்தேன். எனக்கும், என் மனைவிக்கும் எந்தக் காலத்திலும் பிரச்னை இருந்தது இல்லை.
இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன். இதற்கிடையில், விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில், என் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து விட்டனர்.
இந்நிலையில், என் மனைவியை கொலை செய்த குற்றவாளிகள் இருவர், வேறொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தான், என் மனைவியை கொலை செய்துள்ளனர்; அதை அவர்களே ஒப்புக் கொண்டனர்.
பின், 'இந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும்' என, அரசு தரப்பு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, கொலை வழக்கில் என் பெயரை நீக்கிவிட்டு, உண்மை குற்றவாளிகளான விஸ்வநாதன், பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் பெயரை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவிட வேண்டும்
நான் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவரும் முன், 59 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அதனால், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். எங்கள் குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டதால், மகனுக்கு திருமணம் செய்வதில் இருந்து, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறேன்.
இந்த துன்பத்தால், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2022 ஜூலையில் வழக்கு தொடர்ந்தேன்.
பொய்யான வழக்கில் என்னை கைது செய்த ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., கனகேசன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, டி.ஜி.பி.,க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
ஆனால், நான் அடைந்த அவமானத்துக்கும், மன உளைச்சலுக்கும் இந்த நடவடிக்கை போதுமானதல்ல. எனவே, தமிழக காவல்துறையால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 1 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் நடராஜன் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
- நமது நிருபர் -

