வேளாண் ஆராய்ச்சி பற்றி அறிய அமைச்சர் ஆஸ்திரேலியா பயணம்
வேளாண் ஆராய்ச்சி பற்றி அறிய அமைச்சர் ஆஸ்திரேலியா பயணம்
ADDED : ஜூலை 20, 2024 02:55 AM
சென்னை : வேளாண் கல்வி ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காக, அமைச்சர் பன்னீர்செல்வம், துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை, ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்கிறார்.
குறைந்த மண்வளம், நீர் பற்றாக்குறை ஆகியவற்றை எதிர்கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டில், வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. அங்கு உற்பத்தியாகும், 72 சதவீத வேளாண் பொருட்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ஆஸ்திரேலியாவில், வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்காக, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு நடந்து வரும் வேளாண் ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள வேளாண் பல்கலைகளுடன், தமிழக வேளாண் பல்கலை வாயிலாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் அபூர்வா, தமிழக வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர், ஒரு வார பயணமாக நாளை, அதாவது, 21ம் தேதி ஆஸ்திரேலியா செல்கின்றனர். இரண்டு பல்கலைகளிலும் நடந்து வரும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிய உள்ளனர்.

