ADDED : ஏப் 04, 2024 06:42 AM

சென்னை : லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்கு, எம்.ஜி.ஆர்., மக்கள் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் எம்.ஜி.ஆர்., நகர் புகழேந்தி தலைமையில், நேற்று மன்ற செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக, லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மன்றத் தலைவர் புகழேந்தி தலைமையில், நிர்வாகிகள், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் சக்ரவர்த்தியை சந்தித்து, ஆதரவு கடிதம் அளித்தனர்.
அந்த கடிதத்தில், 'எங்கள் நிர்வாகிகள் அனைவரும், எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் மக்கள் பணி ஆற்றியவர்கள். எனவே, அ.தி.மு.க., ஓட்டுகளை நம் அணிக்கு மாற்ற வேலை செய்வர். தங்கள் பார்லிமென்ட் குழுவினருக்கு தெரிவித்து, நம் கூட்டணி வெற்றி பெற பயன்படுத்திக் கொள்ளவும்' என, கூறப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து, பா.ஜ., மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி, பதில் கடிதம் கொடுத்தார்.
அந்த கடிதத்தில், 'நாடு நலம் பெற, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதை மனதார வரவேற்கிறோம். நாம் இணைந்து களப்பணியாற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக்குவோம். தமிழகத்தில் தேசியம் மிளிர ஒன்றிணைவோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

