யூமா வாசுகிக்கு 'பால சாகித்ய புரஸ்கார்' விருது 'யுவ புரஸ்கார்' பெற்றார் லோகேஷ் ரகுராமன்
யூமா வாசுகிக்கு 'பால சாகித்ய புரஸ்கார்' விருது 'யுவ புரஸ்கார்' பெற்றார் லோகேஷ் ரகுராமன்
ADDED : ஜூன் 15, 2024 11:15 PM

சென்னை:நடப்பாண்டுக்கான, 'பால சாகித்ய புரஸ்கார்' விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கும்; 'யுவ புரஸ்கார்' விருது, எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவருக்கும் கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான, 'சாகித்ய அகாடமி' சார்பில், ஆண்டு தோறும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, 'சாகித்ய அகாடமி, பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார்' உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருதுகளில், இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, நேபாளம், ராஜஸ்தானி, மைதிலி, கொங்கணி, போடோ, டோக்ரி உள்ளிட்ட 23 மொழிகளுக்கு, 2024ம் ஆண்டுக்கான இளைஞர் இலக்கிய விருதான, 'யுவ புரஸ்கார்' அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு வந்தார்
தமிழில், 'விஷ்ணு வந்தார்' சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கு, 'யுவ புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'சால்ட்' பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நுாலை, எழுத்தாளர்கள் பஞ்சாங்கம், மாலன், திருமலை ஆகியோர் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்துஉள்ளது.
மேலும், 24 மொழிகளில் குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு, 2024ம் ஆண்டுக்கான, 'பால சாகித்ய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழில், 'தன்வியின் பிறந்த நாள்' என்ற நுாலுக்காக எழுத்தாளர் யூமா வாசுகி, 'பால சாகித்ய புரஸ்கார்' விருது பெறுகிறார்.
'பாரதி புத்தகாலயம்' வெளியிட்டுள்ள இந்நுாலை, எழுத்தாளர்கள் ஆயிஷா நடராஜன், நிர்மலா மோகன், காமராசு ஆகியோர் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்துஉள்ளது.
டில்லியில் நடக்கும் விருது வழங்கும் விழாவில், 50,000 ரூபாய்க்கான காசோலை, செப்பு பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
யூமா வாசுகி
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுாரில், 1966 ஜூன் 23ல் பிறந்தவர் யூமா வாசுகி. இயற்பெயர் மாரிமுத்து. தந்தை தினகரன். தாய் ரமணியம்மாள். கும்பகோணம் அரசினர் கலை தொழிற்கல்லுாரியில் ஓவியக் கலையில் டிப்ளமா படித்தவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயனின், 'கசாக்கிண்ட இதிகாசம்' நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக, 2017ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'ரத்த உறவு, மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களையும், 'துாய கண்ணீர், தேநீர்க் குடில்' உள்ளிட்ட குழந்தைகளுக்கான நுால்களையும் எழுதியுள்ளார்.
லோகேஷ் ரகுராமன்
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில், 1990 மே 23ல் பிறந்தவர் லோகேஷ் ரகுராமன். தந்தை நடேசன், தாய் வேதாம்பாள்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் பி.இ., பட்டம் பெற்று, பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். 'விஷ்ணு வந்தார், அரோமா' என்ற இரு நுால்களை எழுதியுள்ளார்.

