யோக்கியர்களை ஆட்சியில் அமர்த்துவது முழுக்க முழுக்க நம் பொறுப்பே!
யோக்கியர்களை ஆட்சியில் அமர்த்துவது முழுக்க முழுக்க நம் பொறுப்பே!
UPDATED : ஏப் 17, 2024 07:49 AM
ADDED : ஏப் 16, 2024 10:20 PM

தேர்தல் என்பது அவரவரின் பிழைப்பையும், இயல்பு வாழ்க்கையையும் மறக்கடிக்கும் பிம்பமாகி விடுகிறது.
நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை தேன் ஒழுக பரப்பி, பாமரர்களுக்கு ஆசை காட்டி நம்ப வைத்து... சிறப்பான வழிப்பறி!
விவசாயம் என்றால் -அதற்கு உழுது, விதையிட்டு நீர்வார்த்து, களை பறித்து, - பராமரித்து - கள்வர்கள், ஆடு, மாடு, பறவைகள் என, அண்டாமல் அரும்பாடுபட்டு தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் கூட முழு பலனும் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால் அரசியலில்...?
எந்தவித உழைப்பும் இல்லாமலே, நேரடியாக - பொய் - புரட்டு உருட்டி, பிறர் மேல் புரளிப் பிரசாரம் செய்து, இலவசங்களை அறிவித்து, 'லம்ப்'பாக ஓட்டு அறுவடை!
நாமும் அறுவடை செய்ய விட்டு, பின் புலம்புகிறோம். வேடிக்கை பார்த்து அவர்களின் ஆட்டத்தில் ரசித்து மயக்கம்!
விவசாயம் என்றில்லை; எந்த துறையிலும் கூட களைகளை களையா விட்டால் பலன் கிடைக்குமா?
சொந்த விஷயத்திற்கு இத்தனை சிரத்தை எடுக்கும் நம் -நாடு, -ஜனநாயகம் மற்றும் நாட்டு நலன் என்று வரும்போது சுணங்கலாமா? சுணங்குவதால் தானே மேலும் மேலும் பந்தாடப்படுகிறோம்!
சுத்தம், சுகாதாரம், போக்குவரத்து, தரமான மருத்துவம், தண்ணீர், கல்வி, மின்சாரம், சாலைகள், கலப்படமில்லா பொருட்கள் என, நமக்கு வேண்டியதை செய்து தரும் ஊழியர்களான அரசியல்வாதிகளை ஆராதிக்கிறோம்.
ஓட்டுக்காக அவர்கள்--, ஊழல், ஜாதி, -மத பிரிவினையை கிளப்பி, பகை மூட்டி- குளிர்காயும் கயமை, கொள்ளை, தடையில்லா மது, போதை பொருட்கள் போன்றவற்றை மறந்து, -தேர்தல் நேரத்து பகட்டுகளில், மடிகிறோம்.
'முன் எங்களிடம் சொன்னதைச் செய்யாமல் கிட்டே வராதே... உன் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை களைந்து - உத்தமன் என, நிரூபித்து விட்டு, பின் ஓட்டு கேட்க வா-...' என்று விரட்டினால் அவர்கள் வருந்துவர், திருந்துவர்.
பொதுவாக கட்சிக்காரர்கள், அபிமானிகள் அவரவர்களின் குற்றம் குறைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. வாழ்நாள் அடிமைகளாக கண்ணையும், மூளையும், அடகு வைத்து, அவரவர் சார்ந்த கட்சிகளுக்கு ஓட்டு போடுவது வாடிக்கை.
அப்புறம் அவர்கள் எப்படி திருந்துவர்; எப்படி திருத்துவது? நல்ல மாற்றம் எப்படி வரும்?
இது ஒரு புறம் இருக்க, கட்சி சாரா படித்தவர்களின் நிலைமை, இன்னும் கூட கவலைக்கிடம். 'அவன் சரியில்லை; இவன் சரியில்லை' என, வெட்டியாய் பேசுவர். ஆனால், அயோக்கிய அட்டூழியங்கள், ஊழல் வஞ்சகங்களைத் தட்டிக் கேட்பதில்லை; அதற்கு துணிவதில்லை; முனைவதில்லை. நமக்கேன் என நழுவல்.
ஆனால் நேரிலும், - சமூக ஊடகங்களிலும், வாயும் வயிறும் கிழிய பேசுவர்.
பேசுவதோடு சரி. தேர்தல் சமயம் ஓட்டுப் போடவும் செல்வதில்லை. வெயில் என்பர்; 'எவன் போய் க்யூவில் நிற்பது... வேறு வேலை இல்லையா...' என, ஒதுங்குவர்.
வெயில், கூட்டம், பெரிய வரிசை -காத்திருப்பு என சால்ஜாப்பு கூறுவர்.
எந்த கிரிக்கெட் விளையாட்டில் கூட்டமில்லை? சினிமா? மத வித்தியாசமில்லாமல் உற்சவம், திருவிழா என, பண்டிகைகளுக்கு போய் நிற்கவில்லையா? தேர்தலும் கூட ஒரு திருவிழா தானே!
அயோக்கியர்கள் நம்மை ஆள விடாமல், யோக்கியர்களுக்கு மட்டும் இனி அங்கீகாரம் என நெஞ்சை நிமிர்த்தி, நாற்காலியில் அமர்த்த வேண்டியது, முழுக்க முழுக்க நம் பொறுப்பே. அதுவும் நம் ஒரு விரலால்... செய்வோம் அதை. வாழ்க பாரதம்!

