ADDED : ஏப் 02, 2024 09:59 PM
சென்னை:தமிழகத்தில் கர்ப்பிணியர்களுக்கு, மூன்று தவணைகளில் நிதியுதவி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மத்திய அரசின், 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்ட நிதி பங்களிப்புடன், 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதில், 4,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் 14,000 ரூபாய் ரொக்கம், ஐந்து தவணைகளில் வழங்கப்பட்டு வந்தது.
இவற்றை மூன்று தவணைகளாக, மக்கள் நல்வாழ்வு துறை குறைத்தது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் 6,000 ரூபாய்; குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில், 6,000 ரூபாய்; குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில், 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
அதேபோல, பேறு காலத்தில், மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் இதுவரை, 1.14 கோடி கர்ப்பிணியருக்கு, 11,702 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

