நான் குறுநில மன்னன் தான்; நீ பல கட்சி மாறியவன் மாபா பாண்டியராஜனை ஒருமையில் விளாசிய ராஜேந்திர பாலாஜி
நான் குறுநில மன்னன் தான்; நீ பல கட்சி மாறியவன் மாபா பாண்டியராஜனை ஒருமையில் விளாசிய ராஜேந்திர பாலாஜி
ADDED : மார் 07, 2025 09:04 PM
சிவகாசி:''நான் குறுநில மன்னன் தான். பல கட்சி மாறி வந்த நீ, அதைப்பற்றி பேசக் கூடாது,'' என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக தாக்கிப் பேச, அ.தி.மு.க., வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகாசியில், அ.தி.மு.க.,வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்று ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
கட்சியில் மரியாதை இல்லை எனக் கூறும் முன்னாள் அமைச்சரான நீ, இந்த கட்சிக்கு என்ன செய்தாய்? உச்ச நீதிமன்றத்தில் என் மேல போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கு. சி.பி.ஐ., வழக்கை விசாரிக்குது. விசாரணை தொடர்ந்து நடக்குது. இதெல்லாமே திட்டமிட்டு புனையப்பட்டவைதான்.
ஆனாலும், இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில்கும் நான் கட்சி பணி செய்றேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியை பின்பற்றி, பழனிசாமி தலைமையில் வழி நடக்கிறேன். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒரே கட்சியிலதான் பயணிக்கிறேன்.
லண்டனில் படித்தவன், என்னை குறுநில மன்னன் என்கிறான். நீ என்ன சொல்றது? நான், குறுநில மன்னன் தான். என்னுடன் இருப்பவர்கள் வாளேந்தி தான் வருவர். எங்களை அழிக்க, ஒடுக்க நினைப்பவர்களை, கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் என்ன பேடிகளா? யாரையும் தைரியமாக எதிர்த்து நிற்போம்.
தி.மு.க., தான் ஒரே எதிரி என பழனிசாமி கூறியுள்ளார். அவர்களை எதிர்த்து நாங்க போராடிகிட்டு இருக்கோம். லண்டனில் படித்த அதிமேதாவியான நீ ஏன் குறுக்கே வர்றாய். உன்னையெல்லாம் போற போக்கில் ஊதித் தள்ளி விடுவேன். எம்.ஜி.ஆரின் தொண்டன் நான். என் உடம்பில் அ.தி.மு.க., ரத்தம் ஓடுகிறது. உனக்கு எந்த ரத்தம் ஓடுகிறது. முதல்ல காங்கிரஸ், அடுத்து த.மா.கா., பின், பா.ஜ.,, அதுக்கு அடுத்தாப்ல தே.மு.தி.க., தொடர்ந்து அ.தி.மு.க., அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., அணி, தற்போது மீண்டும் அ.தி.மு.க., இத்தனை கட்சி மாறி வந்த உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் கிடையாதா? நீயெல்லாம் ஒரு ஆளுன்னு, என்னோட போட்டி போற வர்றியா?
என்னுடன் இருப்பவர்கள், என்னை எதிர்த்தால், அவர்களை மதிப்பேன். ஆனா, நீ சுத்த பயந்தாங்கொல்லி.
ஒரு வழக்கு போட்டாலே, அடுத்த கட்சிக்கு ஓடி விடுவாய். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என பொதுச்செயலர் சொன்னதன் அடிப்படையிலேயே வந்தவர், போனவர் என எல்லோரையும் சேர்த்துகிட்டு, அமைதியா கட்சி நடத்தி கிட்டு இருக்கேன்.
ஜெயலலிதாவை நீ அவதூறாக பேசிய வீடியோ என் கிட்ட இருக்கு. எத்தனை பேரின் காலை பிடித்து பதவிக்கு வந்தாய் என்பதெல்லாம் எனக்கும் தெரியும். இப்படிப்பட்ட நீயெல்லாம் என்னைப் பற்றி பேச, உனக்கு என்ன அருகதை இருக்கு. நீ ஒரு நல்ல ஆம்பளை என்றால், விருதுநகரில் என்னைப் பற்றி பேசி இருக்க வேண்டும். சென்னைக்கு ஓடிப் போய், என்னப் பற்றி பேசுவது பயமில்லையா.
என்னோடு இருப்பவர்கள் என்றாலும், கோபம் வந்தால் அடிப்பேன். ஆனால், உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கட்டுப்படுவேன். என்னை பகைத்துக் கொண்டு விருதுநகரில் உன்னைப் போன்ற யாரும் அரசியல் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

